Tamilசெய்திகள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 4 இந்தியர் உள்ளிட்ட 8 பேர் மரணம்

கனடா-அமெரிக்கா எல்லையில் 4 இந்தியர்கள் உள்ளிட்ட 8 பேர் இறந்து கிடந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆக்வேசாஸ்னே அருகே உள்ள ஆற்றங்கரையில் உள்ள சதுப்பு நில பகுதியில் இருந்து 8 பேரின் சடலங்களும் கடந்த வாரம் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என தெரிகிறது. அவர்களின் இறப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இறந்தவர்களை அடையாளம் காணவும், அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவும், கனடா குடியேற்றத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆக்வேசாஸ்னே போலீசார் பணியாற்றிவருகின்றனர். மேலும் ஆற்றில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஜனவரி மாதம் முதல் இதுவரை மொஹாக் பிரதேசத்தின் வழியாக கனடாவிற்குள் அல்லது அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 48 சம்பவங்கள் நடந்ததாகவும், இவ்வாறு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய அல்லது ருமேனிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எனவும் ஆக்வெசாஸ்னே போலீசார் தெரிவித்துள்ளனர்.