அமெரிக்காவில் கறுப்பின டிரைவர் மீது நாயை ஏவிய போலீஸ்காரர் பணி நீக்கம் செய்யப்பட்டார்

அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலமான ஒஹியோவின் சர்க்கிள்வில் நகரத்தில் நெடுஞ்சாலையில், ஒரு கறுப்பினத்தவர் மீது தனது நாயை கட்டவிழ்த்துவிட்ட காவல் அதிகாரியை காவல்துறை பணிநீக்கம் செய்துள்ளது.

அந்த அதிகாரியின் பெயர் ரையான் ஸ்பீக்மேன். “காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் வைத்திருக்கும் தரநிலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ரையான் ஸ்பீக்மேன் பூர்த்தி செய்யவில்லை. அதனால் அவர் இத்துறையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்,” என்று காவல்துறை தெரிவித்துள்ளது. “ஸ்பீக்மேன் நியாயமான காரணங்களின்றி நீக்கப்பட்டிருக்கிறார். அவர் சார்பாக குறைகேட்பு மனு ஒன்றை நாங்கள் தாக்கல் செய்வோம்” என காவலர் நலச்சங்கம் கூறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையின் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு, ஒரு அறிக்கையையும், வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், “ஜூலை 4ல், 23 வயதான ஜடேர்ரியஸ் ரோஸ் என்பவர் டிராக்டர் டிரெய்லர் வாகனம் ஒன்றை ஓட்டி சென்றுள்ளார். சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தை நிறுத்தும்படி கை காட்டி உள்ளனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றது. கொலம்பஸ் பகுதியிலிருந்து தெற்கே 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் அதிகாரிகள் “ஸ்டாப் ஸ்டிக்ஸ்” எனப்படும் டயரின் காற்றை குறைத்து விடும் சாதனங்களை பயன்படுத்தி அவ்வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவில் காணப்படுவதாவது: போலீஸ் அதிகாரிகள் ரோஸை வாகனத்தில் இருந்து இறங்க உத்தரவிட்டதால், ரோஸ் தனது கைகளை உயர்த்தி வாகனத்தின் அருகே நின்று கொண்டிருக்கிறார். “நாயை விடுவிக்க வேண்டாம்” என்று ஒரு உள்ளூர் அதிகாரி கூறியதையும் மீறி சர்க்கிள்வில் காவல்துறை அதிகாரி ஸ்பீக்மேன், காவல்துறை நாய் ஒன்றை ரோஸ் மீது கட்டவிழ்த்துவிடுகிறார்.

முழங்காலிட்டிருக்கும் ரோஸை நோக்கி ஓடும் அந்த நாய், அவரை கடித்து இழுக்கிறது. “தயவுசெய்து நாயை விலக்குங்கள்” என ரோஸ் அலறுகிறார். இக்காட்சிகள் அந்த வீடியோவில் தெரிகின்றன. இதனை கண்ட பலரும் கொந்தளித்து தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ரோஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும், காவல்துறை அதிகாரி ஸ்பீக்மேன் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ஷான் பாயர் ஆகியோரை பணிநீக்கம் செய்யுமாறும் முகநூலில் ஆர்வலர்கள் கோரினர். இந்நிலையில் ஸ்பீக்மேனின் பணிநீக்க அறிவிப்பு வந்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news