அமெரிக்காவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 2 ஆக உயர்வு
உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளில் பரவி வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே, உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிலும் நுழைந்து விட்டது. ஆப்பிரிக்க நாடு ஒன்றில் இருந்து கலிபோர்னியா திரும்பி வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட நபரும், அவரது நெருங்கிய தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் நுழைந்திருப்பது இதுவே முதல் முறை.
இதைத்தொடர்ந்து, வெள்ளை மாளிகை வெளியிட்ட ஓர் அறிக்கையில், கோவிட் ஜாப்ஸ் மற்றும் பூஸ்டர்களைப் போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது.
இந்நிலையில், அமெரிக்காவின் மின்னசோட்டா பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது என அந்த மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் ஒமிக்ரான் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.