Tamilசெய்திகள்

அமெரிக்காவில் உள்ள சாலைகள் தரத்தில் உத்திரபிரதேசத்தில் சாலைகள் அமைக்கப்படும் – அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் அம்மாநில அரசும், மத்திய அரசும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக அந்த மாநிலத்தில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பிரதமர் மோடி அந்த மாநிலத்தில் முகாமிட்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பொதுமக்களுக்கான நிலத்திட்டங்களை துவக்கி வைத்து வருகிறார்.

இந்நிலையில் அம்மாநிலத்தின் பிரதாப்கர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது: உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க.ஆட்சி அமைந்தால், சாலை திட்டங்களுக்காக மட்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 5 லட்சம் கோடி நிதி முதலீடு செய்யப்படும். அமெரிக்காவில் உள்ள சாலைகளை போன்ற தரத்தில் உத்தரப்பிரதேச சாலைகளை நான் உருவாக்குவேன். இவ்வாறு தமது பேச்சின்போது மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் 1,123 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கடந்த வாரம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அம்மாநில முதமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய மந்திரி நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.