அமெரிக்காவில் இந்திய பெண் மீது தாக்குதல்!
அமெரிக்காவில் வசித்து வருபவர் அவ்னீத் கவுர் (வயது 20). இந்தியப் பெண்ணான இவர், தனது தோழியுடன் சமீபத்தில் நியூயார்க் மேன்ஹாட்டனில் சுரங்க ரெயிலில் பயணம் செய்தார்.
அப்போது அவ்னீத் கவுருடன், அந்த ரெயிலில் பயணம் செய்த நியூயார்க்கை சேர்ந்த அல்லாஷீத் அல்லா (54) என்பவர் வாய் தகராறில் ஈடுபட்டார்.
அவ்னீத் கவுரும், அவரது தோழியும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என கிண்டல் செய்தார்.
இந்த நிலையில் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவ்னீத் கவுரும், அவரது தோழியும் இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தனர். அல்லாஷீத் அல்லா அவர்களைப் பின்தொடர்ந்தார். அவர் திடீரென அவ்னீத் கவுரின் பின் தலையில் அடித்தார். அவரது நெஞ்சிலும் குத்தினார்.
இதில் அவ்னீத் கவுர் கீழே சுருண்டு விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக அங்குள்ள குயின்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அல்லாஷீத் அல்லாவை கைது செய்தனர். அவர் அவ்னீத் கவுர் மீது வெறுப்புணர்வு தாக்குதல் நடத்தியதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக அரசு வக்கீல் ரிச்சர்டு பிரவுன் கூறினார்.
இந்த சம்பவம், நியூயார்க் இந்திய வம்சாவளி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.