Tamilசெய்திகள்

அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ஆதரவு பெற்ற கதாய்ப் ஹிஸ்புல்லா அமைப்பின் மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

அதில் ஒருவர் அந்த அமைப்பின் மூத்த தளபதி (விஸ்ஸாம் முகமது அபு பக்கர் அல்-சாதி) ஆவார். கொல்லப்பட்டவர்கள் கிழக்கு பாக்தாத் மஷ்தல் என்ற இடத்தில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தபோது, அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழு ஜோர்டான் நாட்டில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மூன்று அமெரிக்கா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற கதாய்ப் ஹிஸ்புல்லா அமைப்புதான் முக்கிய காரணம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா ஈரான், சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் ஈரான் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்களை குறிவைத்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. அதன்தொடர்ச்சியாக நேற்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா நிலைகளை அமைத்து வீரர்களை அமர்த்தியுள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் தொடங்கியதில் இருந்த அமெரிக்கா நிலைகளை குறிவைத்து ஆயுதமேந்திய குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஜோர்டான் தாக்குதலுக்குப் பிறகு, ஈராக் அரசுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தடுக்க, அமெரிக்க நிலைகள் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்படும். ஆனால், மற்ற இடங்களில் தாக்குதல் தொடரும் என கதாய்ப் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.