அமெரிக்காவிடம் இருந்து 31 ட்ரோன்களை வாங்குகிறது இந்தியா
இந்திய பிரதமர் மோடி நான்கு நாள் சுற்றுப் பயணமாக வருகிற 21-ந்தேதி அமெரிக்கா செல்ல இருக்கிறார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தையின்போது பாதுகாப்பு தொடர்பான விசயங்கள் முக்கியம்சம் பெறும் எனத் தெரிகிறது.
இந்தநிலையில் அமெரிக்காவிடம் இருந்து 3 பில்லியன் டாலர் மதிப்பிலான 31 ஆயுதமேந்திய MQ-9B கடல் பாதுகாப்பு டிரோன்களை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் எனத் தெரிகிறது. இந்த 31 டிரோன்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலதன கொள்முதலுக்கான உயர்மட்டக்குழு ஒப்புதல் வழங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது டிரோன்களை கொள்முதல் செய்வதற்கான முதல்படியாகும். இருந்தாலும் மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
சீனாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்தியா உடனான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த ஜோ பைடன் முன்னுரிமை அளித்து வருகிறார். இரண்டு வருடத்திற்கு முன்பாகவே 30 டிரோன்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால் பாதுகாப்பு அமைச்சகம் இறுதி முடிவு எடுக்காமல் இருந்தது. இந்த டிரோன்கள் இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படையால் ரோந்து பணிக்கு ஈடுபடுத்தப்படும். இந்திய கடற்படையில் இரண்டு ஆயுதமில்லாத MQ-9B டிரோன்கள் கண்காணிப்பு பணியில் 2020 நவம்பரில் இருந்து ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.