இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் வாரிய தலைவராக இருப்பவருமான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
வருகிற 23-ந்தேதி மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் வாரிய வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் கங்குலி புதிய தலைவராக பொறுப்பேற்கிறார்.
இதேபோல மத்திய மந்திரி அமித்ஷாவின் மகனும் குஜராத் கிரிக்கெட் சங்க தலைவரான ஜெய்ஷா செயலாளராகவும், மத்திய மந்திரி அனுராக் தாகூரின் சகோதரரும், இமாச்சல பிரதேச மாநில கிரிக்கெட் சங்க தலைவரான அருண் சிங் துமால் பொருளாளராகவும் கேரள கிரிக்கெட் சங்க தலைவரான ஜெய்யேஷ் ஜார்ஜ் இணை செயலாளராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
பிரிஜேர் பட்டேல் ஐ.பி.எல். சேர்மனாக தேர்வானார்.
இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் தான் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அமித்ஷாவை சந்தித்து 1 மணி நேரம் பேசிய பிறகு தான் கங்குலிக்கு கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி ஒரு மனதாக கிடைத்தது. அதற்கு முன்புவரை அந்த பதவிக்கு போட்டி இருக்கலாம் என்று கருதப்பட்டது.
மேலும் கங்குலி பா.ஜனதாவில் சேரபோவதாகவும், அவரை மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளராக பா.ஜனதா நிறுத்தப்போவதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி அரசியல் ஆதாயத்தால் கிடைக்கவில்லை என்று கங்குலி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எனது கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி குறித்து அமித்ஷா தெரிவித்த கருத்துக்களை கேட்டேன். நாங்கள் இருவரும் அரசியல் பேசவில்லை என்று அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த சந்திப்பை அரசியலுடன் தொடர்புபடுத்துவது தவறானது.
கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்காக நான் அவரை சந்திக்கவில்லை. எந்தவித அரசியல் நோக்கத்திலும் எனக்கு கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி கிடைக்கவில்லை.
இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.