மேற்கு வங்காள சட்டசபைக்கு 30 தொகுதிகளில் நடந்த முதல்கட்ட தேர்தலில் பா.ஜனதா 26 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருந்தார்.
இந்தநிலையில், நந்திகிராம் அருகே சந்திப்பூர் தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இதற்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதில் அளித்தார். அவர் பேசியதாவது:-
ஒரு தலைவர், முதல்கட்ட தேர்தல் நடந்த 30 தொகுதிகளில் பா.ஜனதா 26 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறி இருக்கிறார். ஏன், 30 தொகுதிகளையும் சொல்ல வேண்டியதுதானே? மீதி தொகுதிகளை காங்கிரசுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும் விட்டு விட்டார் போலிருக்கிறது.
தேர்தல் முடிந்த மறுநாளே எப்படி இதுபோன்று சொல்ல முடிகிறது? 8 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதன்பிறகுதான் மக்கள் தீர்ப்பு தெரிய வரும்.
அதற்குள் நான் கணிப்பு வெளியிட மாட்டேன். ஆனால், 84 சதவீத ஓட்டுகள் பதிவானதை பார்த்தால், மக்கள் எங்களுக்குத்தான் ஓட்டு போட்டிருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறது.
வாக்குப்பதிவு நாளில் ஓட்டு போடுவது முடியும் வரை நமது முகவர்கள் அங்கிருந்து வெளியேறக்கூடாது. நான் கண்காணித்தபடியே இருப்பேன். கட்சிக்கு எதிராக செயல்பட்டாலோ, எதிர்க்கட்சியிடம் பணம் பெற்றாலோ எனக்கு தெரிந்து விடும்.
மேற்கு வங்காளத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகளை பிரிப்பதற்காக ஐதராபாத்தில் இருந்து ஒரு தலைவர் வந்துள்ளார். டெல்லியிலும், குஜராத்திலும் மதக்கலவரம் நடந்தபோது அவர் எங்கே போயிருந்தார்?
இவ்வாறு மம்தா பேசினார்.