அமிதாப் பச்சனின் ஒரு அறிவுரையை மட்டும் கடைபிடிக்க முடியவில்லை – ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றது. விழாவில் பேசிய ரஜினிகாந்த், தனது நண்பரும் திரையுலகில் தனக்கு உத்வேகம் அளிக்கும் நட்சத்திரமுமான அமிதாப் பச்சன் குறித்து மனம் திறந்தார். அவர் பேசியதாவது:-
அமிதாப் பச்சன் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். நாங்கள் இருவரும் ஒரு முறை தமிழ்நாட்டில் இருந்தபோது, 60 வயதுக்குப் பிறகு நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். 60 வயதில் 3 விசயங்களைக் கடைப்பிடிக்கும்படி அறிவுரை வழங்கினார்.
1. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், 2. ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக இருங்கள், 3. அரசியலில் நுழையக் கூடாது.
இவற்றையெல்லாம் நான் அமிதாப்பிடம் இருந்து கற்றுக்கொண்டேன். ஆனால் சூழ்நிலைகள் காரணமாக அவரின் மூன்றாவது ஆலோசனையை என்னால் பின்பற்ற முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அமிதாப் பச்சன் நடித்த படங்களின் ரீமேக்கில் நடிக்க விரும்பினால், எந்த படத்தில் நடிப்பீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமிதாப், தனுஷ் ஆகியோர் நடித்த ஷமிதாப் படத்தை தேர்வு செய்தார் ரஜினி.