X

அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றம்

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (14-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது.

இந்த ஆண்டு பட்ஜெட் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாள் விவாதம் நடந்தது. 3-வதுநாள் விவாதத்துக்காக இன்று காலை 10 மணிக்கு சட்டசபை வழக்கம் போல் கூடியது.

கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த ஜெயலலிதா ஓய்வு எடுத்த கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக பேச தொடங்கினார்.

உடனே சபாநாயர் குறுக்கிட்டு என்னிடம் அனுமதி பெறாமல் நேரமில்லா நேரத்தில் பேசுவது போல் பேசுகிறார்கள். இதை அனுமதிக்க முடியாது என்றார்.

என்றாலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசினார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு..க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்றனர். சபாநாயகர் அனுமதி அளிக்காததால் கோ‌ஷமிட்டனர்.

பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம் என்று குரல் எழுப்பினார்கள். பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம் என்ற வாசகம் அடங்கிய அட்டைகளையும் காண்பித்தனர்.

அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று சபாநாயகர் பலமுறை கூறினார். என்றாலும் அவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பினார்கள். இருப்பினும் சபாநாயகர் எடப்படி பழனிசாமி பேச அனுமதி வழங்கவில்லை. அவரது பேச்சை அவைகுறிப்பில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார். அப்போது சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் அ.தி.மு.க.வினர் கோ‌ஷமிட்டபடியே வெளிநடப்பு செய்தனர்.

அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை லாபியில் அமர்ந்தும், சட்டசபை வாயிலில் நின்றும் கோ‌ஷம் எழுப்பினார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையடுத்து சபை காவலர்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோ‌ஷமிட்ட படியே வெளியேறினார்கள்.

மு.க.ஸ்டாலின்:- இங்கே எதிர்க்கட்சித் தலைவர், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற அடிப்படையிலே பேசி, இங்கே ஒரு பிரச்சனையைக் கிளப்பியிருக்கிறார். அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை நிரூபித்து விட்டு, இங்கேயிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். கொடநாடு கொலை, கொள்ளை விசாரணையைப் பொறுத்தமட்டிலே, தேர்தல் காலத்திலே கொடுத்திருந்த வாக்குறுதியைத்தான் இப்போது இந்த அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதே தவிர, வேறல்ல.

நள்ளிரவிலே நடைபெற்ற அந்தக் கொள்ளைச் சம்பவத்திலே, அடுத்தடுத்து நடைபெற்று இருக்கக்கூடிய மரணங்கள், விபத்து மரணங்கள் போன்றவை அப்போதே மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.

அதனால்தான் அந்தக் கொள்ளை, கொலை வழக்குகள் விசாரிக்கப்பட்டு, உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று ஏற்கெனவே தேர்தல் நேரத்திலே நாங்கள் வாக்குறுதி கொடுத்து இருக்கிறோம்.

அதன் அடிப்படையிலே, முறைப்படி நீதிமன்றத்திலே அனுமதி பெற்றுத்தான் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசியல் நோக்கத்தோடு அல்ல; முறைப்படி நீதிமன்றத்திலே அனுமதியைப் பெற்று, நீதிமன்றத்தினுடைய அனுமதியோடுதான் இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

ஆகவே, இதில் அரசியல் தலையீடோ, பழிவாங்குகிற எண்ணமோ நிச்சயமாக இல்லை. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலே கிடைக்கக்கூடிய தகவலின் அடிப்படையில், நிச்சயமாக உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர, வேறு யாரும் இதற்கு அச்சப்பட வேண்டிய பயமோ, அவசியமோ இல்லை.

இந்த அரசு நிச்சயமாக சட்டத்தின் ஆட்சியை நடத்தும். ஆகவே, கொடநாடு வழக்கிலே, நீதிமன்றத்தின் அனுமதியோடு நடக்கும் விசாரணைக்கு, ‘அரசியல் நோக்கத்தோடு’ என்று ஒரு களங்கத்தைச் சுமத்தி இருக்கிறார்கள். அப்படியல்ல என்பதை தெளிவுபடுத்துவதற்காகத்தான், இந்த விளக்கத்தை இந்த அவையிலே நான் எடுத்து வைத்திருக்கிறேன்.

சபாநாயகர்: அ.தி.மு.க. உறுப்பினர்கள் வேண்டும் என்றே கூச்சல், குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது.

இது நமது அரசு என்று முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். சபை கண்ணியத்துடன் நடக்கிறது. ஆனாலும் சட்டமன்ற லாபியிலும், வாயிலிலும் கோ‌ஷம் எழுப்புகிறார்கள். நமது முதல்- அமைச்சர் எதிர்க்கட்சி என்று பாகுபாடு இல்லாமல் நடந்து கொள்கிறார். எனவே இதை யாரும் பலகீனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

மு.க.ஸ்டாலின்:- நான் தொடக்கத்திலேயே சொன்னேன். அரசியல் நோக்கத்தோடு, பழிவாங்குகிற நோக்கத்தோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்; ‘தேர்தல் நேரத்திலே சொன்ன உறுதிமொழிகள் என்னவாயிற்று? எதையும் நிறைவேற்றவில்லை, நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதிலே ஒன்றுதான் இது. இன்னும் பல வி‌ஷயங்கள் இருக்கின்றன. எனவே, நீதிமன்றத்தினுடைய வழிகாட்டுதல்படி நீதிமன்றத்தினுடைய உத்தரவின் அடிப்படையில்தான், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, தனிப்பட்ட முறையில், அரசியல் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்பதை பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர், ஜி.கே. மணிக்கும் நான் இதை வலியுறுத்திக் குறிப்பிட்டுக் காட்டிட விரும்புகிறேன்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன், இது ஒரு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்கிறார். மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம் இருக்கும். எனவே, யாரும் பயப்பட வேண்டியதில்லை; அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து அதன் கூட்டணி கட்சியான பா.ம.க.வும் ஒரு சில வார்த்தைகளை கூறிவிட்டு வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து பா.ஜ.க.வினரும் வெளிநடப்பு செய்தனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டதால் இன்றைய கூட்டத்தில் அவர்கள் மீண்டும் கலந்து கொள்ள முடியாது.

பா.ம.க., பா.ஜனதாவினர் வெளிநடப்பு செய்ததால் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.