Tamilசெய்திகள்

அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்த முதலமைச்சர் கெஜ்ரிவால்

டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தனக்கு சம்மன் அனுப்பியது சட்டவிரோதம் என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். 7-வது மற்றும் 8-வது முறையாக சம்மன் அனுப்பியபோது நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

இதற்கிடையே 9-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சம்மனுக்கு எதிரான தடைவிதிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ளார்.

அதில் விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை ஏதும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டாம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்படும். அதற்கு அமலாக்கத்துறை பதில் அளிக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். ஒன்பது சம்மனுக்கும் எதிராக கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வக்கீல் அமலாக்கத்துறை முன் கெஜ்ரிவால் ஆஜரானால் கைது நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்றார்.

இருந்தபோதிலும், சம்மன் அனுப்பியதற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறையிடம் கேட்டுக்கொண்டதுடன் வழக்கை ஏப்ரல் 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. அதனைத் தொடர்ந்துதான் கெஜ்ரிவால் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.