காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டு யாத்திரை, கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை, சிரவண மாத பவுர்ணமியான நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
கடைசி நாளில், அமர்நாத் கோவில் வாரியத்தின் கூடுதல் தலைமை செயல் அதிகாரி அனுப்குமார் சோனி மற்றும் இதர அதிகாரிகள், அமர்நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். மாநிலத்தில் அமைதியும், முன்னேற்றமும் நிலவ வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அப்போது, இந்த ஆண்டு யாத்திரையில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 587 பக்தர்கள் தரிசனம் செய்து இருப்பதாக அனுப்குமார் சோனி தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த ஆண்டு யாத்திரையை வெற்றிகரமாக நடத்த உதவியதற்காக மாவட்ட நிர்வாகம், போலீசார், ராணுவம், துணை ராணுவப்படை ஆகியவற்றுக்கு கவர்னர் சத்யபால் மாலிக் நன்றி தெரிவித்தார்.