Tamilசெய்திகள்

அமராவதி அணையின் நீர் வரத்து அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூா் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் ஆகிய மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது.

இந்தநிலையில் திருப்பூா் மாவட்டம் ராமகுளம், கல்லாபுரம் பாசனப்பகுதிகளுக்கு நெல் சாகுபடிக்காக கடந்த ஜனவரி மாதம் முதல் மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. மேலும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உட்பட்ட ராஜவாய்க்கால்களான ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சா்க்காா் கண்ணாடிப்புத்தூா், சோழமாதேவி, கணியூா், கடத்தூா், காரத்தொழுவு ஆகிய 8 வாய்க்கால்களுக்கு மே 16-ந்தேதி முதல் செப்டம்பா் 28-ந் தேதி வரை மொத்தம் 135 நாட்களுக்கு பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் அமராவதி அணையின் நீா்மட்டம் சரிந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கேரள மாநிலம் மறையூா், காந்தலூா் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் முக்கிய நீராதாரமான பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக 12,500 கன அடி தண்ணீா் அணைக்கு வந்து கொண்டிருந்தது. மேற்கு தொடா்ச்சிமலைப் பகுதியில் உள்ள நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் 90 அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் இன்று காலை 10 மணி அளவில் 87அடியை தாண்டியது. முழுக்கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக அமராவதி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

மேலும் அமராவதி ஆற்றின் உப நதிகளான வரதமா நதி, குதிரை ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினா் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனா். மேலும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளும் கரையோர பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். அணைக்கு உள்வரத்தாக 10 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 9ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அமராவதி அணை நிரம்பியுள்ளதால் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.