X

அப்துல் கலாம் 88வது பிறந்தநாள் – பிரதமர் மோடி மரியாதை

முன்னாள் ஜனாதிபதி மற்றும் அணு விஞ்ஞானி ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 88-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு தலைவர்களும் அப்துல் கலாம் பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்தி புகழாரம் சூட்டி வருகின்றனர். கலாம் நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

கலாம் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-

21 ஆம் நூற்றாண்டில் நவீன மற்றும் வலுவான இந்தியாவை உருவாக்கும் சிந்தனையை கலாம் கொண்டிருந்தார், அதை அடைய அவரது முழு வாழ்க்கையையும் நாட்டிற்காக அர்ப்பணித்தார்.

அவரது முன்மாதிரியான வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகம் அளிக்கிறது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு இந்திய நாடு வணக்கம் செலுத்துகிறது.

இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை உலக மாணவர்கள் தினமாக கடந்த 2010ம் ஆண்டு ஐ.நா சபை அறிவித்தது.

கடந்த 2005 ஆண்டு மே மாதம் 26 ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டிற்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அப்துல் கலாம் சென்றார். அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் காலடி எடுத்து வைத்த அந்த நாளை தேசிய அறிவியல் தினமாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்து கலாமிற்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.