Tamilசெய்திகள்

அப்துல் கலாம் பிறந்தநாள் – தலைவர்கள் மரியாதை

மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி, மாணவர்களின் வழிகாட்டி என போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள என அனைத்து தரப்பினரும் கலாமின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரது புகைப்படங்களையும், அவர் மாணவர்களுக்கு கூறிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

‘புதிய மற்றும் வலிமையான இந்தியா என்ற கனவை நனவாக்குவதற்காக, நாட்டின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்காக கலாம் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். அவர் தொடர்ந்து வரும் நம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பார். அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரும், இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணை திட்டங்களை கட்டமைத்தவருமான டாக்டர் கலாம் எப்போதும் வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க விரும்பியதாக உள்துறை உள்துறை மந்திரி அமித் ஷா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அறிவியல் மற்றும் கல்வித் துறையில் அவரது பங்களிப்பு என்றும் உத்வேகம் அளிப்பதாக உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தி வணங்குவதாகவும், தனது விசாலமான பார்வை மற்றும் மனிதநேயத்திற்காக பணியாற்றி உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்திய மக்கள் ஜனாதிபதியாக அவர் நினைவுகூரப்படுகிறார் என்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குறிப்பிட்டுள்ளார்.