அபிநந்தன் மீண்டும் விமானத்தில் பறப்பாறா? – விமானப்படை தளபதி பதில்

பாகிஸ்தானிடம் சிக்கி விடுதலையான விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சில பரிசோதனைகளுக்காகவும், சிறப்பு சிகிச்சைக்காவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரி சுபாஷ் ராவ் பாம்ரே ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். அபிநந்தன் நல்ல மனநிலையிலும், உற்சாகமாகவும் இருக்கிறார். விரைவில் அவர் பணிக்கு திரும்ப விரும்புகிறார் என நேற்று தகவல்கள் வெளியாகின. பாரசூட் மூலம் கீழே குதித்ததில் அவரது முதுகுத்தண்டின் கீழ்பகுதியில் உள்ள எலும்பில் காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை விமானப்படை தளபதி பிஎஸ் தனோவா இன்று பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

விங் கமாண்டர் அபிநந்தன் மீண்டும் பணிக்கு திரும்புவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ‘அபிநந்தன் மீண்டும் போர் விமானத்தில் பறப்பாரா, இல்லையா? என்பது அவரது உடல்தகுதியை பொருத்ததாகும். பாரசூட்டில் இருந்து கீழே குதித்த அவருக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் முறையான பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அங்கு அவருக்கு தேவையான அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்படும். மீண்டும் பணியில் சேர்வதற்கான முழு உடல்தகுதி அபிநந்தனுக்கு உள்ளது என்பது தொடர்பான மருத்துவ சான்றிதழ் எங்களுக்கு கிடைத்தவுடன், அவர் போர் விமானத்தில் பறப்பார்’ என்று தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools