அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் குவிந்த மக்கள்!

எல்லையில் நடந்த தாக்குதலின்போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் சிறைப்பிடித்தது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, போர்க் கைதியாக பிடிபட்டுள்ள அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. மேலும் அபினந்தனை விடுவிப்பதற்காக ராஜாங்கரீதியாகவும் தீவிர முயற்சி மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, அபினந்தனை விடுவிக்கும்படி வலியுறுத்தினார்.

அதன்பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான்கான், அமைதியை விரும்பும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் மார்ச் 2ம் தேதி (இன்று) விடுவிக்கப்படுவார் என அறிவித்தார். இதையடுத்து அபினந்தனை விடுவிக்கும் நடைமுறைகளை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டது.

அதன்படி, அபினந்தன் ராவல்பிண்டியில் இருந்து விமானம் மூலம் லாகூருக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து இன்று மதியம் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். அவரை வரவேற்பதற்காக ராணுவ அதிகாரிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் வாகா எல்லைக்கு சென்றுள்ளனர். அபினந்தனின் பெற்றோரும் அவரை வரவேற்க நேற்று இரவே டெல்லி புறப்பட்டு வந்தனர்.

இதேபோல் வரவேற்பதற்காக ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதலே வாகா எல்லையில் குவியத் தொடங்கினர். அவரை வரவேற்று பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools