அன்று அமித்ஷா, இன்று ப.சிதம்பரம்!
இந்திய நாட்டின் உள்துறை மந்திரியாக 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை வலம் வந்து, சி.பி.ஐ.யை தன் கண்ணசைவில் வைத்திருந்த ப.சிதம்பரம் இன்று தன்னை கைது செய்ய டெல்லி ஜோர்பாக் இல்லத்துக்கு அதே சி.பி.ஐ. படையெடுத்து வரும் என்று நினைத்துப்பார்த்திருக்கமாட்டார்.
4 முறை நிதி மந்திரி பதவி வகித்து, அமலாக்கத்துறை இயக்குனரகத்தை தன் நிர்வாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த ப.சிதம்பரம், இன்று தன்னை கைது செய்வதற்காக அதே அமலாக்கத்துறை அதிகாரிகள் வீடு தேடி வருவார்கள் என்றுதான் நினைத்திருப்பாரா?
நினைக்காததெல்லாம் நடக்கிறது என்றால் அதை என்னவென்பது? அதைத்தான், வரலாறு திரும்புவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதற்கு, கொஞ்சம் பின்னால் போய்த்தான் ஆக வேண்டும்.
மத்தியில் ப.சிதம்பரம் உள்துறை மந்திரி பதவி வகித்தபோதுதான், குஜராத்தில் சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்ட்டரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
அங்கு உள்துறை மந்திரியாக இருந்த அமித் ஷா, இந்த வழக்கில் சிக்கினார்.
2010-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி அவர் கைது செய்யப்பட்டார். 3 மாதங்கள் கழித்துத்தான் குஜராத் ஐகோர்ட்டு 2010 அக்டோபர் 29-ந்தேதி வெள்ளிக்கிழமை அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இருப்பினும் அவர் குஜராத்தில் இருக்கவே தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் 2 ஆண்டுகள் குஜராத்தில் இருக்க முடியாமல் டெல்லிக்கு இடம் பெயர்ந்து குஜராத் பவனில் உள்ள அறையில் வாசம் செய்யும் நிலை வந்தது. 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அவர் குஜராத் திரும்ப அனுமதி அளித்த பின்னர் தான் குஜராத் திரும்ப முடிந்தது.
இன்று 9 ஆண்டுகள் கடந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி பதவியை அலங்கரிப்பவர், அமித் ஷா. அவரது கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. உள்ளது. நிதி மந்திரி தமிழ்நாட்டின் நிர்மலா சீதாராமன். அவரது நிர்வாக கட்டுப்பாட்டில் அமலாக்கத்துறை இயக்குனரகம் வருகிறது.
ப.சிதம்பரமோ ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கித் தவிக்கிறார்.
ஓராண்டு காலம் கைது செய்வதில் இருந்து தடை செய்யப்பட்டு வந்த ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது கிளைமாக்ஸ்.
இப்படி ஒரு கிளைமாக்ஸ் காரணமாக அதிர்ச்சி அடைந்த ப.சிதம்பரம் நிவாரணம் தேடி தனது வக்கீல்களுடன் சுப்ரீம் கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறினார். அங்கும் உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை.
இதற்கிடையேதான், ப.சிதம்பரத்தின் வீட்டை நோக்கி சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகளும் படையெடுத்தனர். சுவர் ஏறி வீட்டிற்குள் குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தனர்.
இப்போது 9 ஆண்டுகளுக்கு முன்னர் அமித் ஷா கைது செய்யப்பட்டதையும், தற்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பதையும் முடிச்சு போட்டு வரலாறு திரும்புவதாக கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.