அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு வாக்கு கேட்டு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3-வது நாளாக நேற்று ஈரோட்டில் பிரசாரம் செய்தார். கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் முதல் சூரம்பட்டி நால்ரோடு வரை பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு அவர் ஆதரவு திரட்டினார். அவர் ராஜகோபால் தோட்டம் பகுதியில் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் எந்த திட்டமும் செய்யவில்லை என்று பச்சை பொய் கூறுகிறார்.

21 மாத ஆட்சியில் தி.மு.க. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு பணி கூட செய்யவில்லை. அமைச்சர்கள் வீதி வீதியாக வந்து வாக்காளர்களுக்கு ரூ.1000, ரூ.2000 என்று கொடுக்கிறார்கள். தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நான் முதல்-அமைச்சராக இருந்தபோது 110 விதியின் கீழ் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டு 90 சதவீதம் பேருக்கு வழங்கினேன். ஆனால் 21 மாத தி.மு.க. ஆட்சியில் 7 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகளில் 53 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுத்தோம். அதை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது.

அம்மா 2 சக்கர வாகனம் வழங்கும்திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் என்று அ.தி.மு.க. திட்டங்களை நிறுத்தி விட்டனர். மின்கட்டணம் 54 சதவீதம் உயர்த்தி விட்டனர். இன்னும் 4 ஆண்டுகளில் 24 சதவீதம் உயரும். வீட்டு வரி, கடைவரி என அனைத்தும் உயர்ந்து விட்டது. இப்படி படித்தவர்கள், பாமரர்கள் என்று அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க., எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools