அனைவரும் அர்ச்சராகும் திட்டத்தை கைவிட மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பலர் பேசினார்கள்.
ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலன் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசும்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதுபற்றி அறநிலையத் துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அமைச்சர் சேகர்பாபு அளித்த விளக்கம் வருமாறு:-
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இதன்படி தமிழகத்தில் காலியாக இருந்த 58 இடங்களுக்கு அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமூக வலைத் தளங்களில் அரசியல் நடத்துபவர்கள் மத்தியில் மக்களை தேடி அரசியல் செய்யும் தலைவராக நமது முதல்வர் உள்ளார்.
திருச்சி நாகநாத சுவாமி கோவிலில் அர்ச்சராக பணிபுரிந்தவர் வேறு கோவில்களிலும் அர்ச்சகராக பணிபுரிகிறார். இதையடுத்து, நாகநாத சுவாமி கோவிலுக்கு வேல்முருகன் என்பவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் சமூக வலைத் தளங்களில் ஏற்கனவே பணிபுரிந்த அர்ச்சகர்களை நீக்கிவிட்டு புதிதாக அர்ச்சகர்களை நியமித்ததாக தவறான தகவல்களை சிலர் பரப்புகிறார்கள். 70 வயதை தாண்டிய பிறகும் சில கோவில்களில் அர்ச்சகர்கள் பணியில் நீடிக்கிறார்கள்.
2006-ம் ஆண்டு தமிழகத்தில் பெண் ஒருவர் அர்ச்சராக நியமிக்கப்பட்டார். குடும்ப சூழல் காரணமாக அவர் அந்த பணியில் நீடிக்க முடியவில்லை. அதன்பிறகு இப்போது தான் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் அவதூறுகளை பரப்புகிறார்கள். இது போன்ற உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் எங்கள் முதல்வர் பயப்படமாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்து பேசியதாவது:-
அறநிலையத்துறை அமைச்சர், ஒரு விளக்கத்தை இங்கே தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்கிறேன்.
நம்மை ஆளாக்கிய நம்முடைய தந்தை பெரியாருடைய நெஞ்சிலே தைத்த முள் இது. அந்த முள்ளை எடுத்திட வேண்டுமென்பதற்காக கலைஞர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி இருந்தார்.
அது நடைமுறைக்கு வரமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது அதனை நாம் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; அதற்கான பணி ஆணைகளை நாம் வழங்கியிருக்கிறோம்.
ஆனால், சிலர், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இங்கேகூட நம்முடைய அமைச்சர் சொல்கிறபோது, ‘ஊடகத்திலே’ என்று சொன்னார். ஊடகத் துறையினரை நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால், அதைப் பயன்படுத்திக் கொண்டு, சமூக வலைதளங்களில், இதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே சிலர் திட்டமிட்டு, சில காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
யாரையும், எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து இந்தப் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அப்படி எங்கேயாவது வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஆதாரத்தோடு சொல்வார்களென்று சொன்னால், அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக எடுக்கும். அதிலே எந்தவிதமான சந்தேகமும்பட வேண்டிய அவசியமில்லை.
ஆகவே, வேண்டுமென்றே அதைக் கொச்சைப்படுத்தி, அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியைப் பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலோ சிலர் திட்டமிட்டு செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள் என்பதை மாத்திரம் நான் இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.