சென்னை வானகரத்தில் நடைபெற்ற தென்னிந்தியத் திருச்சபை பவள விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
இந்தியா என்பது பல்வேறு மதத்தவர் வாழ்கின்ற நாடு. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். வாழ்கிறோம். அவரவர் மத நம்பிக்கை என்பது அவரவருக்குச் சொந்தமானதே தவிர, அடுத்தவருக்கு எதிரானதாக இருக்காது.
மனிதர்கள் அனைவரும் சமம் என்பதுதான் சமத்துவம். யாரையும் வேற்றுமையாகப் பார்க்காதே என்பதுதான் சகோதரத்துவம். அனைவருடனும் சேர்ந்து வாழ் என்பதுதான் ஒற்றுமை. ஏழைகள் மீது கருணை காட்டு என்பதுதான் இரக்கம். அநீதிக்கு எதிராக குரல் கொடு என்பதுதான் நீதி. மற்றவர்களுக்காக வாதாடு என்பதுதான் தியாகம்.
உன்னிடம் இருப்பதை இல்லாதவருக்குக் கொடு என்பதுதான் பகிர்தல். இதைத் தான் கிறிஸ்தவம் சொல்கிறது. இத்தகைய குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால் அதுதான் சமத்துவ நாடாக அமையும். இத்தகைய நோக்கம் கொண்ட திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். நாங்கள் நடத்தி வருகிறோம் என்றால், உங்கள் அன்போடும், ஆதரவோடும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியினுடைய அடிப்படை நோக்கம். பசித்த வயிறுகளுக்கு உணவாக, தவித்த வாய்க்குத் தண்ணீராக, திக்கற்றவர்களுக்குத் திசையாக, யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக- இருக்க நினைக்கும் அரசாக எமது அரசு செயல்பட்டு வருகிறது. மன்னிக்கவும், நமது அரசு செயல்பட்டு வருகிறது.
எமது அரசு என்பது அனைவரையும் உள்ளடக்கிய அரசுதான். இந்த அரசுக்கு அன்பும் உரிமையும் இரண்டு கண்கள். ஒரு கை உழைக்கவும், இன்னொரு கை உணவூட்டவுமான அரசாகச் செயல்பட்டு வருகிறோம். எப்படி எங்கள் மீது உங்களுக்கு சந்தேகம் இல்லையோ அதுபோல் உங்கள் மீதும் எங்களுக்கு என்றைக்கும் சந்தேகம் இருந்தது கிடையாது.
எனவே, எப்போதும் நாம் ஒருங்கிணைந்து இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தை, சமுதாயத்தை காப்பாற்றுவதற்கு சாதி, மதங்களைக் கடந்து நாம் நம்முடைய பணியைத் தொடர வேண்டும் என்கிற உறுதி எடுத்துக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சியாக நான் இந்த பவளவிழா நிகழ்ச்சியைக் கருதிக்கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.