Tamilசெய்திகள்

அனைத்து மாநிலங்களுடனும் இணைந்து செயல்படவே விரும்புகிறோம் – அமித்ஷா

சத்தீ‌‌ஷ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூரில், மத்திய மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா கலந்துகொண்டார்.

மத்திய மண்டலத்தில் இடம்பெற்றுள்ள உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்தியபிரதேசம், சத்தீ‌‌ஷ்கார் ஆகிய 4 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்றனர். அந்த மாநிலங்களை சேர்ந்த தலா 2 மந்திரிகள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, வனம், சுற்றுச்சூழல் உள்பட மத்திய மண்டலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடக்கத்தில் பேசிய மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத், பல்வேறு பிரச்சினைகள் மத்திய-மாநில அரசுகளுக்கிடையே மோதலுக்கு வழிவகுக்கின்றன என்று கூறினார்.

பின்னர், மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா பேசியதாவது:-

இதுபோன்ற பலன் அளிக்கக்கூடிய கூட்டங்களை நடத்த மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. 4 முதல்-மந்திரிகளும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். நிதி தட்டுப்பாடு காரணமாக, எதிர்பார்ப்பு ஏராளமாக இருக்கிறது.

ஜனநாயகத்தில் மக்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால், எல்லா நேரத்திலும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது கடினம்.

இருப்பினும், எல்லா மாநிலங்களுடனும் சிறப்பான இணைந்து செயல்பட மத்திய அரசு விரும்புகிறது. பட்ஜெட் நிதி ஒதுக்கீடோ, வளர்ச்சியோ, சட்டம்-ஒழுங்கு விவகாரமோ எதுவாக இருந்தாலும், அவர்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறது.

மாநிலங்களின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு எல்லா உதவிகளும் அளிக்கும்.

இவ்வாறு அமித்‌ஷா பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *