Tamilசெய்திகள்

அனைத்து பேருந்துகளிலும் மீண்டும் திருவள்ளுவர் சிலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் கருணாநிதி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது கருணாநிதி, ‘தனி மனித ஒழுக்கத்தையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் 2 அடிகளில் தெளிவாக விளக்கும் உலக பொதுமறை நூலான திருவள்ளுவரின் திருக்குறள் அனைத்து அரசு பஸ்களிலும் இடம் பெற வேண்டும். திருவள்ளுவரின் படமும் வைக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

அதன்படி அனைத்து மாநகர, தொலைதூர அரசு பஸ்களில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள்கள் இடம் பெற்றன. டிரைவர் இருக்கைக்கு பின்புறம் பயணிகள் கண்ணில் சட்டென்று தெரியும் வகையில் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் வைக்கப்பட்டன.

மேலும் பயணிகள் அமரும் ஜன்னல் இருக்கை ஓரம் திருக்குறள் எழுத்து வடிவிலும், ஸ்டிக்கர் வடிவிலும் ஒட்டப்பட்டிருந்தன.

இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான அரசு பஸ்களில் திருவள்ளுவர் படம் மாயமானதும், சில பஸ்களில் திருவள்ளுவர் படத்தை பராமரிக்காததால் அலங்கோலமாகவும், மங்கலாகவும் இருப்பதும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனத்துக்கு வந்தது.

இதுகுறித்து அவர் உடனடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பனை அழைத்து மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மு.க.ஸ்டாலின், ‘அனைத்து போக்குவரத்து கழக பஸ்களிலும் திருவள்ளுவர் படம், திருக்குறள், அந்த குறளுக்கான விளக்கவுரையும் பயணிகள் பார்வையில் எளிதில் தென்படும் வகையில் இடம் பெற வேண்டும்.

திருவள்ளுவரின் எந்த மாதிரியான புகைப்படம் வைக்க வேண்டும். எந்த குறள் இடம் பெற வேண்டும் என்பதை நான் தேர்வு செய்து தருகிறேன்’ என்று அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

இதன் மூலம் அனைத்து அரசு பஸ்களிலும் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் விரைவில் காட்சி அளிக்கும் என்றும், திருக்குறளும், அதன் விளக்கவுரையும் பஸ்களை மீண்டும் அலங்கரிக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.