அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், விருப்ப மனுவினை 1-ந்தேதிக்குள் அளிக்கவேண்டும் என்று அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், அம்மா பேரவைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கழக அம்மா பேரவை சார்பில், எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுவை தாக்கல் செய்ய மதுரையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் புறப்பட்டு சென்றார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா வளர்த்த அ.தி.மு.க. இயக்கத்தை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றிப் பாதையில் நடத்தி வருகிறார். இன்றைக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இரண்டு கோடி தொண்டர்கள் விருப்ப மனுவை பெற்றுக்கொண்டு வருகிறார்கள்.
40 தொகுதிகளில் தனித்தொகுதியைத் தவிர, அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடியார் போட்டியிட வேண்டும் என்று அம்மா பேரவை தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதனை தொடர்ந்து எடப்பாடியார் பெயரில் சென்னை தலைமைக் கழகத்தில் அம்மா பேரவை சார்பில் எடப்பாடியார் போட்டியிட விருப்ப மனுவை நாளை தாக்கல் செய்ய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
பிரதமர் மோடி பல்லடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புரட்சித்தலைவரையும், அம்மாவையும் புகழ்ந்து பேசி உள்ளார். இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றுவித்தார். இதனைத் தொடர்ந்து 32 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து மக்களுக்கு பல்வேறு சாதனை திட்டங்களை தந்தது.
குறிப்பாக கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், மக்களின் வாழ்வாதார திட்டத்திற்காக தொலைநோக்கு திட்டங்கள், பசி பட்டினி இல்லாத வண்ணம் 20 கிலோ அரிசி உள்பட இதுபோன்ற திட்டங்கள் மூலம் அனைவரின் பாராட்டை அம்மா அரசு பெற்றது. அ.தி.மு.க. ஆட்சியை யாரும் குறை கூற முடியாது. அதற்கு தான் பாரத பிரதமர் புகழாரமாக அளித்துள்ளார்.
அந்த சான்று இன்றைக்கு புரட்சித்தலைவர், அம்மாவின் மறுவடிவமாக உள்ள எடப்பாடியாரையே சாரும். அதுமட்டுமல்ல 17 மருத்துவக்கல்லூரிகள், 2,000 அம்மா மினி கிளினிக், 69 சதவீத இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவருக்கு மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு இதுபோன்ற திட்டங்களை யாரும் மறக்க முடியாது.
இன்றைக்கு 2 கோடி தொண்டர்கள், 8 கோடி தமிழக மக்களின் நன்மதிப்பை எடப்பாடியார் பெற்றுள்ளார். தமிழகம் முழுவதும் 68,520 வாக்கு சாவடிகளில் அ.தி.மு.க.வின் வலுவான கட்டமைப்பு உள்ளது. சாமானிய மக்களின் இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. கூட்டணி குறித்து எடப்பாடியார் அ.தி.மு.க. நிலைப்பாட்டை மன உறுதியுடன் பலமுறை எடுத்துச் சொல்லி விட்டார்.
மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் கூட தெளிவாக கூறியுள்ளார். பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்பது தான் அ.தி.மு.க. நிலைப்பாடு. ஆனால் பா.ஜனதா தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை என்பது அவர்கள் கட்சியை பொறுத்த விவகாரம். எனவே அ.தி.மு.க. நிலைப்பாட்டில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்த பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. முடிவை தெள்ளத்தெளிவாக எடப்பாடி யார் கூறிவிட்டார். இன்றைக்கு மூன்றாம் பெரிய கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. மக்களை காக்கும் பணியில் எடப்பாடியார் மன உறுதியுடன் உள்ளார். மத்திய அரசு, மாநில அரசை எதிர்த்து நின்று 100 சதவீத வெற்றி பெறுவார். இதுதான் அ.தி.மு.க. நிலைப்பாடு, இதில் நாங்கள் உறுதியாக பயணம் செய்வோம்.
இன்றைக்கு அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட அனைவரும் விருப்ப மனு தாக்கல் செய்து வருகிறார்கள். தகுதி உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்து தலைமை கழகம் அறிவிக்கும். அவர்களை வெற்றி பெறச் செய்ய நாங்கள் பாடுபடுவோம். பாராளுமன்றத்தில் முல்லைப் பெரியாறு, காவிரி குறித்து தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பேசவில்லை. தமிழகத்தின் உரிமையை காக்க தி.மு.க. கூட்டணியில் உள்ள 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை. வரும் காலத்தில் அவர்களுக்கு சரியான தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள். அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.