அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர் வெளியாக வேண்டும் – ரஜினிக்கு கோரிக்கை வைத்த திரையரங்க உரிமையாளர்கள்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
‘ஜெயிலர்’ திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதையடுத்து நடிகர் ரஜினிக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நூதன கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதில், “ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அனைவரும் திரையரங்கிற்கு வந்து படம் பாருங்கள் என்று பேசினார். அது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.