பாராளுமன்ற மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது, சீனாவுடனான எல்லை பாதுகாப்பு பிரச்சினையை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுப்பினார்.
அவர் பேசியதாவது:-
பாகிஸ்தான் போன்ற பகையாளியான அண்டை நாடுகள்தான் இந்தியாவுக்கு அமைந்துள்ளன. பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் அளிப்பதுடன், அவர்களுக்கு அடைக்கலமும் பாகிஸ்தான் அளிக்கிறது. பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு கொண்ட சீனாவுடன் இந்தியாவின் அணுகுமுறை மிகவும் மென்மையானதாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதில் அளித்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
எல்லை தொடர்பாக இந்தியா-சீனா இடைய கருத்தியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகளால், அவ்வப்போது இரு நாட்டு படைகளும் அத்துமீறும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
எல்லை பாதுகாப்பு விஷயத்தில் ராணுவம் விழிப்புடன் இருக்கிறது. எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது. எனவே, எல்லை பாதுகாப்பு பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.