அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் கடத்துவோம் – போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வந்த மிரட்டல் கடிதம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் கடந்த 14-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று 19-வது நாளாக இந்த போராட்டம் நீடிக்கிறது. போராட்டக்குழு நிர்வாகிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பேசினார். எனினும் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பிலும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு நேற்று ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. ‘அல் ஹக்‘ என்ற புதிய அமைப்பின் பெயரில் வந்த அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
நாங்கள் 250 பேர் ஒரு இயக்கமாக செயல்படுகிறோம். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த கூடாது. அவ்வாறு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தினால் எங்கள் இயக்கத்தில் உள்ள 250 பேரும் சேர்ந்து தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களை கடத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் கடிதம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.