Tamilசெய்திகள்

அனுமதியின்று போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக-வினர் கைது

தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக நேற்று கூடியது. பேரவைத் தலைவர் வினாக்கள் விடைகளுக்கான நேரத்தை தொடங்கினார். அப்போது, இ.பி.எஸ். தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சட்டசபையில் இருந்து வெளியேறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவு தி.மு.க. தலைவர் ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இதற்கிடையே, சட்டசபையில் நடைபெற்ற சம்பவம் குறித்து அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது.

இதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை முதலே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுகவினர் கருப்பு சட்டை ஆணிந்து போராட்டத்தில் ஈடுபட தயாராக இருந்தனர்.

தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். போராட்டத்தின் குறியீடாக கருப்பு உடையணிந்து ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சட்டசபையில் நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எல்எல்ஏக்களை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றினர்.