Tamilசினிமா

அனிதா எம்.பி.பி.எஸ் படத்திற்கு சிக்கல்!

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டவர் திருச்சியை சேர்ந்த மாணவி அனிதா. இவரது வாழ்க்கையை அனிதா எம்பிபிஎஸ் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் வி.ராஜகணபதி ஈடுபட்டார்.

பிக்பாஸ் ஜூலி கதாநாயகியாகவும், அஜய்குமார் என்பவர் இயக்குனராகவும் அறிவிக்கப்பட்டு முதல் பார்வையும் வெளியானது. தற்போது இப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

“மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் வி.ராஜகணபதி மற்றும் எஸ்.பாலாஜி தயாரிக்கும் திரைப்படம் ‘டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ்’. சமூகத்தில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அவரது சோகக்கதையை இளைஞர்களுக்கான, சமூகத்திற்கான சப்ஜெக்டாக எடுக்க விரும்பி இந்த டைட்டிலை செப்டம்பர் 2017ல் தயாரிப்பாளர் சங்கங்களில் முறைப்படி பதிவு செய்து இன்று வரை தன்னுடைய பேனரில் வைத்துள்ளார் ராஜ கணபதி.

டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ் திரைப்படம் கடந்த வருடம் ‘எஸ்.அஜய் குமார்’ எனும் இயக்குனர் இயக்குவதாக திட்டமிடப்பட்டது. தயாரிப்பாளரின் முதல் முக்கிய கண்டிஷன் என்னவென்றால் அனிதா குடும்பத்தினரின் அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அதற்கான எந்த ஒரு முயற்சியையும் இயக்குநர் எடுக்கவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.

மேலும் அனிதா குடும்பத்திற்கும், தயாரிப்பாளருக்கும் காட்டப்பட வேண்டிய பவுண்டடன் (BOUNDED) ஸ்கிரிப்ட்டும் அவரால் கொடுக்க இயலவில்லை. இது சம்பந்தமாக ஒரு கட்டத்தில் தயாரிப்பாளருடனும், அனிதா சகோதரருடனும் இயக்குனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இப்படிப்பட்ட முக்கியமான காரணங்களினால் `தயாரிப்பாளர் இயக்குனரிடமிருந்து விலகி தானே அனிதா குடும்பத்தாரிடம் அனுமதி பெற்ற பிறகு படம் எடுக்க போவதாக கூறிவிட்டார். இதனால் தயாரிப்பாளர் அனிதா குடும்பத்தினருடன் பல முறை நேரிலும் போனிலும் தொடர்பு கொண்டு தானே இப்படம் எடுப்பதற்கான முயற்சிகளை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

எஸ். அஜய்குமாருக்கும், டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ் திரைப்படத்திற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்பதை தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ராஜ கணபதி கூறும்போது, ‘அஜய்குமார் என்னுடைய டைட்டிலிலேயே புதிய படம் எடுக்க ஆரம்பித்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. எனக்கு சொந்தமான இந்த ‘டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ்’ எனும் தலைப்பை அவரோ அல்லது வேறு எவரும் பயன்படுத்த கூடாது. ஏனெனில் இந்த தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் எமது தயாரிப்பு நிறுவனமான ‘மாங்காடு அம்மன் மூவிஸ்’ சார்பில் முறைப்படி பதிவு செய்துள்ளோம்.

எங்கள் நிறுவனமான மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் நாங்கள் எடுக்கும் “டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ்” படத்தில் அனிதாவின் தந்தையாக நான் நடிக்கிறேன். அனிதாவின் அண்ணன் மணிரத்னம் ஆக பெரம்பூரை சேர்ந்த எஸ்.ராஜன் என்பவர் அறிமுகமாகிறார். இப்படம் அனைத்து தரப்பு மக்களுக்கும், அரசுக்கும் நல்ல செய்தியை கொண்டு சொல்லும் என்பதுடன் விருதுகள் பலவும் பெற்றுத்தரும் வகையிலும் இருக்கும் என உறுதியளிக்கிறோம்” என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இப்படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *