அனல் காற்றுடன் கடும் வெயிலால் வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திர காலம் மே 4 ஆம் தேதி தொடங்குகிறது

தமிழ்நாட்டில் கோடை காலம் மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஆரம்பிக்கும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் கணிசமான வெயில் பதிவு இருந்து, அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் உச்சகட்ட வெப்பம் பதிவாகும். அந்த வகையில் இந்த ஆண்டு ‘ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது’ என்று சொல்வது போல, மார்ச் மாதம் ஆரம்பத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.

அதிலும் கடந்த மாதத்தில் (ஏப்ரல்) பெரும்பாலான இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகி இருந்தன. அதிலும் குறிப்பாக ஈரோடு, கரூர், வேலூர், சேலம், தர்மபுரி, மதுரை, திருத்தணி, திருப்பத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் அதிகமாக வெப்பத்தின் தாக்கத்தை உணர முடிகிறது. இதில் ஈரோடு, கரூரில் இதுவரை 105 டிகிரியை கடந்து வெயில் பதிவாகி இருக்கிறது.

ஆரம்பமே இப்படி இருக்கிறது என்றால், ‘கிளைமேக்ஸ்’ எப்படி இருக்குமோ? என்று சொல்லும் அளவுக்கு அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கிறது. அதன்படி, வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. 25 நாட்கள் நீடிக்கும் இந்த வெயில் காலம் 28-ந்தேதியுடன் விடைபெறும்.

வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரையில், அக்னி நட்சத்திரம் என்பது போன்ற பெயரை அவர்கள் உச்சரிப்பது இல்லை. இருந்தாலும், கோடை காலத்தின் இறுதி பகுதியான மே மாதத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதை அவர்கள் மறுக்கவில்லை. அந்த வகையில் இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், அனல் காற்றுடன் அதிகபட்ச வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அக்னி நட்சத்திரம் காலத்தில், கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 17-ந்தேதி திருத்தணியில் 113.9 டிகிரி வெயில் பதிவானது தான் அதிகபட்ச வெயில் பதிவாக கூறப்படுகிறது. அதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டில் சென்னை மற்றும் வேலூரில் 113 டிகிரியும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டை பொறுத்தவரையில், அக்னி நட்சத்திரம் காலம் வாட்டி வதைக்குமா?, இதுவரை பதிவான வெயில் அளவை விட அதிகமாக பதிவாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools