பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் அறிக்கை விடுத்திருக்கிறார். எப்போதெல்லாம் திமுகவின் மீது மக்களுக்கு அதிருப்தி அலை வீசுகிறதோ, எப்போதெல்லாம் ஊடகங்கள் கூட திமுகவிற்கு எதிராக பேச தொடங்குகின்றனவோ, அப்பொதெல்லாம் மொழிப் பிரச்சினையை எழுப்புவது திமுகவின் திராவிட மாடல்.
ஏதே வட நாட்டிலிருந்து ஒரு தீய சக்தி வந்து, தமிழை அழித்து விட போகிறது என்று, அம்புலிமாமா மாயக்கதையை அக்காலத்தில் நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறார்கள். அந்த காலத்திலெல்லாம் மக்களை அவர்களால் எளிதாக திசை திருப்ப முடிந்தது. சமூக ஊடகத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் இந்த கால கட்டத்தில் இது போல மக்களை அத்தனை எளிதாக ஏமாற்றி விட முடியாது.
உலகம் தோன்றிய காலத்தில் இருந்து திமுகதான் தமிழை காப்பாற்றி வந்து இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை முதல்வர் உருவாக்க நினைப்பது நகைப்பிற்கிடமாக இருக்கிறது. தமிழ் மொழி, திமுகவை மட்டும் நம்பியிருப்பதாக நினைக்க வேண்டாம்.
1967ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி பொறுப்பில் மாறி மாறி இருக்கும் திமுக, ஒரு வார்த்தை கூட தமிழ் எழுத தெரியாத ஒரு சமுதாயத்தை உருவாக்கி இருக்கிறது. தமிழில் பேசுவது அவமானம் என்று நினைக்கும் ஒரு தமிழ் சமுதாயத்தை படைத்திருக்கிறது.
தமிழ் வளர்த்த ஆலையங்களையும், தமிழ் மொழியை காப்பாற்றிய ஆன்மீகத்தையும் மொத்தமாக அழித்தொழிக்கும் திமுகதான் நம் மொழியை காக்கப் போகிறதா? இதை நாங்கள் நம்ப வேண்டுமா? தமிழர்களின் அடையாளமாகிய எங்கள் திருக்கோவில்களையும், எங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழியையும், மக்களாகிய நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம். தயது செய்து கவலைக்கிடமாக இருக்கும் தங்கள் ஆட்சியையும், தமிழ் நாட்டையும் கொஞ்சம் கவனியுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.