X

அதிரடி காட்டும் அஸ்வின்! – திணறும் ஆஸ்திரேலியா

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சொதப்பியதால் இந்தியா தடுமாறியது. கடுமையாகப் போராடிய புஜாரா சதம் அடித்து அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. ஷமி 6 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் பந்திலேயே ஷமி ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 250 ரன்களில் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசில்வுட் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ், லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்கை தொடங்கியது. துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச், முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அவரது விக்கெட்டை இஷாந்த் சர்மா கைப்பற்றி அசத்தினார். அதன்பின்னர் ஹாரிஸ்-கவாஜா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அணியின் ஸ்கோர் 45 ரன்களை எட்டியபோது, அஸ்வின் பந்தில் ஹாரிஸ் ஆட்டமிழந்தார். அவர் 26 ரன்கள் சேர்த்திருந்தார். அவரைத் தொடர்ந்து ஷான் மார்சையும் அஸ்வின் வீழ்த்தினார். இதன்மூலம் 59 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து கவாஜாவுடன் இணைந்த ஹேண்ட்ஸ்காம்ப் மிகுந்த எச்சரிக்கையுடன் பந்துகளை கையாண்டார். 40-வது ஓவரில் கவாஜாவின் விக்கெட்டையும் அஸ்வின் கைப்பற்றினார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 87/4. முன்னணி வீரர்களை இழந்த ஆஸ்திரேலிய அணியின் வேகம் குறைந்தது.