இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ். இவர் முதன்முறையாக இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடினார். 10 போட்டிகளில் 445 ரன்கள் குவித்து அசத்தினார். சராசரி 55.62 ஆகும். ஆர்சிபி-க்கு எதிராக சதம் விளாசினார்.
தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.
பேர்ஸ்டோவ் 93 பந்தில் 128 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடியது மிகப்பெரிய உதவியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் மூலம் மாறுபட்ட பயிற்சியாளர்கள், மாறுபட்ட வீரர்களிடம் இருந்து பல்வேறு மாறுபட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதில் சிறிய அளவில் போட்டியின் திட்டங்களும் இருக்கும்.
டேவிட் வார்னர் முற்றிலும் மாறுபட்ட பகுதிகளில் பந்தை விரட்டக்கூடியவர். இது வேறெங்கும் இல்லாத முறை. இதில் இருந்து வார்னர் போன்ற வீரர்கள் இருக்கும்போது, நெருக்கடியான நிலையில் எப்படி சிறப்பாக விளையாட முடியும் என்பதை கற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.