X

அதிரடிப்படை என்ற பெயரில் தொழிலதிபரிடம் இருந்து ரூ.1.70 கோடி பறித்த கும்பல் கைது

பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும், பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த சோதனையைப் பயன்படுத்தி, பணம் பறிக்கும் கும்பலும் சில இடங்களில் கைவரிசை காட்டுகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று தொழிலதிபர் ஒருவர் காரில் வந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்துள்ளது. அதிரடிப்படையினர் என அவர்கள் தங்களை அறிமுகம் செய்ததுடன், அந்த தொழிலதிபரின் காரை சோதனையிட்டு அதில் இருந்த 1.70 கோடி பணத்தை பறிமுதல் செய்தது.

ஆனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த தொழிலதிபர், போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.26 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை கைப்பற்றினர். அந்தப் பணம் மோசடி செய்து சேர்த்த பணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இந்த வழக்கை அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைக்கு அனுப்பி உள்ளனர்.

Tags: south news