அம்மா மக்கள் முன்னேற்றக்கழக அமைப்பு செயலாளர் மகேந்திரன் இல்ல திருமண விழா மதுரையில் இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சின்னம்மா மீதும், கழகத்தின் மீதும் உண்மையான விசுவாசமும், பற்றும் கொண்டவர் மகேந்திரன். அவரது மகள் திருமணத்தை நடத்தி வைப்பது, எனது மகள் திருமணத்தை நடத்துவது போன்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டுள்ளது.
மணமக்களுக்கு அம்மாவின் ஆசியையும், சின்னம்மாவின் நல்வாழ்த்துகளையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மா அவர்கள் இத்தனை நாள் எதற்காக சிறைவாசம் அனுபவித்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சிறைவாசம் முடிந்து பெங்களூருவில் தங்கியுள்ள சின்னம்மா வருகிற 7-ந்தேதி தமிழகம் வருகிறார் என்ற மகிழ்ச்சியான தகவலை உங்கள் மத்தியில் தெரிவிக்கிறேன்.
மகேந்திரன் போன்ற எண்ணற்ற உண்மை விசுவாசிகளால் அவரது வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு தமிழக எல்லையில் இருந்து வீடு வரை தொண்டர்கள் வழிநெடுக உற்சாகமாக வரவேற்பு கொடுக்க வேண்டும். அப்போது கட்சியினரால் யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும். ராணுவ வீரர்கள் போன்று அணிவகுத்து நின்று சின்னம்மாவை வரவேற்க வேண்டும்.
சின்னம்மா வருகிறார் என்றவுடன் தமிழகத்தில் ரசாயன மாற்றம் நிகழ்வதை காண முடிகிறது. சின்னம்மா வருகை காரணமாக அம்மாவின் நினைவிடத்தை அவசரம், அவசரமாக திறந்தனர்.
அ.தி.மு.க.வில் சேர டி.டி.வி. தினகரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். இவர்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு நான் என்ன தவறு செய்தேன்?
பெண் சிங்கமாக சின்னம்மா வந்து விட்டார். அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்து நம்மை வழிநடத்துவார்.
தீய சக்திகளை துரோகிகளை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும். இதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்க சட்ட ரீதியான போராட்டத்தை தொடருவார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டதே தீய சக்திகளிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்காக தான் என்பது எங்களுக்கு தெரியும்.
எனவே ஜனநாயக களத்தில், தேர்தல் களத்தில் அம்மாவின் ஆட்சி மீண்டும் அமையவும், அம்மா கட்டிக்காத்த இயக்கத்தை மீட்டெடுக்கவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போராடி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.