X

அதிமுக வேட்பாளர்கள் 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தி.மு.க., அ.தி.மு.க.வில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுவாக நல்லநாள் பார்த்து வேட்பு மனுதாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில் தி.மு.க.வில் பெரும்பாலான வேட்பாளர்கள் 25-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இதில் சில வேட்பாளர்கள் 27-ந்தேதி அன்று மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதே போல் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை பொறுத்தவரை 40 தொகுதி வேட்பாளர்களும் வருகிற 24-ந்தேதி திருச்சியில் நடைபெறும் அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.

அதன் பிறகு 25-ந்தேதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். அன்றைய தினம் மனுதாக்கல் செய்ய முடியாதவர்கள் 27-ந்தேதி மனுதாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதே போல் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்களும் 25-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இதே போல் மற்ற கட்சி வேட்பாளர்களும் 25 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் மனுதாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.