அதிமுக-வுக்கு எதிராக செயல்படும் அமைச்சர் கருப்பணன் – முன்னாள் அமைச்சர் புகார்
முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு என்.டி. வெங்கடாச்சலத்துக்கும் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
அமைச்சர் கருப்பணன் குறித்து தோப்பு வெங்காடச்சலம் எம்.எல்.ஏ. கடுமையாக சாடி பேட்டி அளித்தார்.
அவர் கூறும்போது, “கட்சிக்கு விரோதமாக அமைச்சர் கருப்பணன் செயல்பட்டு வருகிறார். தேர்தலின்போது பெருந்துறை தொகுதியில் கட்சி பணியாற்றாமல் மாறாக தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் ஆதரவாக செயல்பட்டார்” என்று பகிரங்கமாக குற்றச்சாட்டை அள்ளி வீசினார்.
இதற்கு அமைச்சர் கருப்பணன் கூறும்போது, “யாரும் எதுவும் சொல்லிவிட்டு போகட்டும் என் விசுவாசம் நேர்மை பற்றி கட்சி தலைமைக்கு தெரியும்” என்று கூறினார்.
இதற்கு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பதிலடி கொடுத்து இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது விஸ்வாசமும் நேர்மையும் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்கு தெரியும். நான் கேட்டது தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக நீங்கள் வேலை பார்த்தீர்களா… இல்லையா? இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை காட்டினால் நீங்கள் (அமைச்சர் கருப்பணன்) ஏற்றுக்கொள்வீர்களா? உங்களது விஸ்வாசத்தை, நடத்தையில் காட்ட வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சி அமைத்த 3 வருட காலத்தில் எத்தனை அ.தி.மு.க. தொண்டர்களின் பிள்ளைகளுக்கு உங்கள் கல்லூரியில் இலவசமாக பயில நீங்கள் அனுமதி அளித்து உள்ளீர்கள்? பட்டியல்போட முடியுமா? அம்மாவின் விசுவாசி என்று கூறும் நீங்கள் தகுதி உள்ள தொண்டர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் பெற்று கொடுத்துள்ளீர்களா? ஒரு தொண்டனையாவது வாழ வைத்ததாக கூறமுடியுமா?
“மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்வார் ஆனால் தன் மக்கள் நலமே ஒன்று என்று இருந்து விடுவார்” புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பாடிய பாட்டு உங்களுக்கு பொருந்தும்.
இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார்.