அதிமுக-வில் இருந்து பிரிந்து செல்பவர்களுக்கு அழைப்பு விடுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
கேள்வி:- மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளதே?
பதில்:- இதுகுறித்து தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கே:- அ.ம.மு.க.வில் இருந்து முக்கிய பிரமுகர்கள் மாற்று கட்சியில் சேர்ந்து உள்ளார்களே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
ப:- அ.தி.மு.க.வுக்கு எப்போதும் ஒரே நிலைபாடு தான் உள்ளது.
சமீபத்தில் அ.ம.மு.க.வில் இருந்து வந்தவர்கள் எனது முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அ.தி.மு.க.வில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது.
வருங்காலங்களிலும் அ.ம.மு.க.வில் இருந்து வருபவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும்.
தினகரனை தவிர அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம். அவர்கள் உரிய மரியாதையுடன் அ.தி.மு.க.வில் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டியது எங்களது கடமை.
கே:- கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் அரசின் நிவாரண உதவிகள் சரியாக சென்றடையவில்லை என்று புகார் எழுந்துள்ளதே?
ப:- குறை கூறுவது எளிது. நிவாரண பணிகள் வழங்குவது கடினமான பணி என்பது அனைவரும் அறிந்தது. கஜா புயலால் 2 லட்சத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. 1500-க்கும் மேற்பட்ட மின் மாற்றிகள் சேதம் அடைந்துள்ளது. இதையெல்லாம் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு சரி செய்து வருகிறது.
பெரும்பாலான இடங்களில் முழு வீச்சில் குடிநீர் வசதி மற்றும் மின் வினியோகம் சரி செய்யப்பட்டுள்ளது. மிக தொலை தூரமான இடங்களில் உரிய போக்குவரத்து வசதி ஏற்படுத்தி நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் முதல்-அமைச்சரின் சொந்த நிதியில் இருந்தும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 30 டன் அரிசி மூட்டைகள் எடப்பாடியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வாகனத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.