X

அதிமுக-வின் பொதுக்குழு கூட்டம் மே 15 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது

அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முதல் கிளை கழக நிர்வாகிகள் வரை தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பொறுப்பில் இருந்த பெரும்பாலான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர்கள், நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் தற்போது உள்ளவர்களே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

கட்சியில் இருந்து மாறி சென்றவர்கள், இறந்தவர்கள் போன்றவற்றால் ஏற்பட்ட காலி இடங்களுக்கு மட்டும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பொதுக்குழு உறுப்பினர்கள், அமைப்பு செயலாளர்கள் போன்ற பதவிகளிலும் ஏற்கனவே உள்ளவர்களே தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்டனர். ஒரு சில இடங்களில் பொறுப்புகளுக்கு போட்டி இருந்தன. அவர்களுக்கு கட்சியில் பிற அணிகளில் வாய்ப்பு தருவதாக கூறி மனுவை வாபஸ் பெறச் சொல்லி தேர்தல் சுமூகமாக நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் பட்டியலை தலைமை கழகம் வெளியிட்டது.

கட்சி ரீதியாக உள்ள 75 மாவட்டங்களுக்கும் அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தங்கள் பணியினையும் தொடங்கிவிட்டனர்.

இதையடுத்து அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடர் 10ந்தேதியுடன் முடிகிறது. அதனால் அதற்கடுத்த ஒரு சில நாட்களில் பொதுக்குழுவை கூட்டலாம் என தலைமை கழக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். 10 அல்லது 11ந்தேதி தலைமை நிர்வாகிகள் கூடி ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் கூடி ஆலோசித்து முடிவு செய்கின்றனர்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உடனடியாக பொதுக்குழுவை கூட்டுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக அ.தி.மு.க. பொதுக்குழு நல்ல நாளிலேயே கூடுவது வழக்கமாக உள்ளது. அதன் அடிப்படையில் வருகிற 15ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) பவுர்ணமி நல்ல நாளாக இருப்பதால் அன்றைய தினம் பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

மே 15ந்தேதிக்கு பிறகு தேய்பிறை என்பதால் அந்த நாட்களில் பொதுக்குழுவை கூட்ட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் அடுத்த வாரத்திலேயே பொதுகூகுழுவை கூட்டி தங்கள் பலத்தை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மேலும் நிரூபிக்க தயாராகி விட்டனர்.

வழக்கம் போல் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்கிறார்கள். ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் ஒரே இடத்தில் கூடுவதற்கும், முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும் அ.தி.மு.க. தலைமை தயாராகி வருகிறது.

கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் மக்கள் பிரச்சினைகளை கையில் எடுக்கவும், ஏழை எளியவர்களுக்கு உதவுவது, 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு வியூகம் அமைப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி வளர்ச்சிப் பணிகளை தீவிரமாக செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன. புதிய நிர்வாகிகள் தலைமையில் பொதுக்குழு கூட இருப்பதால் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் உத்வேகம் அடைந்துள்ளனர்.