அதிமுக-வின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு
அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக் குழுவையும் கூட்ட வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் நிபந்தனையாகும். அந்த வகையில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி நடைபெற்றது.
சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அப்போது ஆலோசித்தனர். இதைத் தொடர்ந்து தேர்தலில் ஆட்சியை இழந்துள்ள சூழ்நிலையில் பரபரப்பான கால கட்டத்தில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 2-வது முறையாக இன்று காலை 10 மணிக்கு கூடியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 280-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுனம் அனுஷ்டித்தனர்.
அதன்பிறகு மறைந்த தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதன்பிறகு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பேச அனுமதிக்கப்பட்டனர்.
அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தை நடத்தும்போது அவைத்தலைவர் தலைமையில் நடத்த வேண்டும் என்பது விதியாகும். ஆனால் தற்போது அவை தலைவர் இல்லாததால் தற்காலிக அவைத் தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழ்மகன் உசேன் தற்காலிக அ.தி.மு.க. அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் தீவிரமாக பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பதவி உள்பட பல்வேறு பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். தற்போது மிக முக்கிய பொறுப்பான அவைத் தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் தலைமையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்ட நிகழ்வுகள் தொடங்கின.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் தமிழ் மகன் உசேனை வாழ்த்தி பேசினார்கள்.
அ.தி.மு.க.வில் உள் கட்சி தேர்தல் இந்த மாதத்திற்குள் நடத்த கோர்ட்டு ‘கெடு’ விதித்துள்ளதால் அது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மாவட்ட வாரியாக கிளை கழகம், நகரம், ஒன்றியம், பேரூர், மாவட்ட கழகம் என படிப்படியாக தேர்தலை விரைந்து நடத்தி முடிக்கும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் செயல்பட வேண்டும் என்றும், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கட்சியின் ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசும்போது தெரிவித்தனர்.
தமிழகத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கீழ் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இதில் ஆளும் கட்சியின் அதிகாரத்தை தாண்டி அ.தி.மு.க. வெற்றி பெற கடுமையாக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா நீக்கப்பட்டது குறித்தும் பேசப்பட்டது. கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அன்வர்ராஜா நடந்து கொண்டதால்தான் அவர் நீக்கப்பட்டதாகவும், பலமுறை அவருக்கு எச்சரிக்கை விடுத்தும் அவர் தொடர்ந்து கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழுவில் இருந்த உறுப்பினர் மாணிக்கம் பா.ஜ.க.வில் இணைந்ததால் அவருக்கு பதிலாக வேறொரு உறுப்பினரை வழிகாட்டுதல் குழுவில் நியமிக்க இருப்பதாகவும் அதற்கு செயற்குழு ஒப்புதல் தேவை என்றும் வலியுறுத்தப்பட்டது.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த “வேதா நிலையம்“ இல்லத்தை அரசுடமை ஆக்கியது செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்து மீண்டும் அதை நினைவு இல்லமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது.
கட்சிக்குள் ஆயிரம் கருத்து மோதல்கள் இருந்தாலும் அதை புறந்தள்ளி விட்டு வெற்றி ஒன்றே குறிக்கோளாக கருதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்காக ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கூட்டத்தில் பேசினார்கள்.
இதுகுறித்து தலைமை கழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
இன்றைய செயற்குழு கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு கட்சி நலன் குறித்து முக்கிய நிர்வாகிகள் பேசினர்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்வர்ராஜா பிரச்சினையும் எழுப்பப்பட்டது. அவர் நீக்கப்பட்டது சரிதான் என்ற வகையில் பேசினார்கள். உள்கட்சி தேர்தல் நடத்துவது குறித்தும் இதில் விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.
இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைய கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசை கண்டித்தும், தி.மு.க. அரசு டீசல் விலையை குறைக்காதது, பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்காதது, பொங்கல் பரிசாக ரொக்கப் பணம் அறிவிக்காதது என வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் தீர்மானங்கள் கொண்டு வருவது.
விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று வேளாண் சட்டங்களை ரத்து செய்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், மழை வெள்ள பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்தும் தீர்மானம் போன்றவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இன்றைய செயற்குழுவில் நிறைவேற்ற வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.