Tamilசெய்திகள்

அதிமுக-வின் அனைத்து பொறுப்புகளும் மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் வந்தது

சென்னையில் கடந்த மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதவி முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கபட்டது.

முன்னதாக ஜூன் மாதம் வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23-ந்தேதிக்கு முன்னர் கட்சியில் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டார் .

இதனால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக நீடிக்கும் நிலை உருவானது. இந்த நிலையில் இன்று சென்னை ஐகோர்ட்டு 11-ந் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது ஓ.பி.எஸ் தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த தீர்ப்பின் மூலம் அவைத்தலைவர், இடைக்கால பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வசம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.