அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமையைக் கைப்பற்ற பல தரப்புகள் முயற்சிகள் எடுத்தன. சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று பலரும் அ.தி.மு.க.வின் ஒற்றைத் தலைமை தாங்களே என்று நிறுவ முயன்றனர். அந்த சச்சரவில் இன்றும் தலைமைக்கு போட்டிபோட்டு வருகின்றன ஈ.பி.எஸ் தரப்பும், ஓ.பி.எஸ் தரப்பும்.
அதே நேரத்தில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, வேறொரு பாதையில் பயணித்தார். ‘மோடி தான் எங்கள் டாடி’ என்று பகிரங்கமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்தார். அவரின் இந்தக் கருத்து அ.தி.மு.க.வுக்கு உள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவரின் செயல்பாடுகள், பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவே இருந்து வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இப்படியான சூழலில் தான் ராஜேந்திர பாலாஜி, டெல்லிக்குப் பயணம் செய்துள்ளார் என்றும் ஓரிரு நாளில் தன்னை அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க.வில் இணைத்துக் கொள்ள உள்ளார் என்றும் தகவல்கள் வந்து பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன. இந்த செய்தியை அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.
இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மாலை மலர் இணையதளம் சார்பாக தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது, “ராஜேந்திர பாலாஜி, தன் டெல்லி பயணம் குறித்து முன்னரே தெளிவுபடுத்தி விட்டார். தன் சொந்த காரியத்துக்காகத் தான் டெல்லி செல்வதாக அவர் கூறிவிட்டார். இன்னும் சொல்லப் போனால் கேதர்நாத் கோவிலுக்குச் செல்வதற்காகத் தான் டெல்லிக்கு சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார். அப்படி இருந்தும் அவர் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக வதந்தி பரப்புவது சரியல்ல.
ஒருவர் டெல்லிக்குப் பயணம் செய்தாலே அவர் பா.ஜ.க.வில் இணையத் தான் சென்றுள்ளார் என்று சொல்வதும் சரி கிடையாது. அவருக்கு அந்தக் கட்சியில் சேரும் எண்ணமில்லை. அ.தி.மு.க.வில் தான் அவர் இருப்பார்” என்றார் உறுதிபட.
ராஜேந்திர பாலாஜி பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொள்கிறாரா என்பது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, “யூகங்கள் அடிப்படையிலான கேள்விக்கு எப்படி பதில் சொல்வது. அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதனால் இந்த கேள்விக்கு அவசியம் இல்லை” என்றார்.
தொடர்ந்து அவரிடம், ‘ஒரு வேளை ராஜேந்திர பாலாஜி, பா.ஜ.க.வில் இணைந்தால் அவருக்கு வரவேற்பு எப்படி இருக்கும்?’ என்று கேட்டதற்கு, “அதை அவர் இணையும் போது பார்த்துக் கொள்ளலாம்” என்று முடித்துக் கொண்டார்.