அதிமுக மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் தள்ளி வைப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முன்கூட்டியே திட்டமிட்டு காய் நகர்த்த தொடங்கியுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

முதல் நாளான நேற்று 14 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. முதல் – அமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும், ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஒவ்வொரு நாளும் காலையில் 7 மாவட்ட நிர்வாகிகளும், மாலையில் 7 மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 13-ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறுவதாக இருந்த மாவட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு, 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

15-ம் தேதி சனிக்கிழமை பகல் 12 மணிக்கு திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கும், மாலை 5 மணிக்கு விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

இந்த ஆலோசனைக் கூட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தங்கள் சார்ந்துள்ள மாவட்டத்திற்கான குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ளமாறு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news