அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11-ந் தேதி சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கட்சி விதிகளில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த பொதுக்குழுவில் ஏகமனதாக சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்தார். சென்னை ஐகோர்ட்டில் சமீபத்தில் அந்த மேல் முறையீடு மனு விசாரணைக்கு வந்த போது, “ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது” என்று நீதிபதி அறிவித்தார். மேலும் ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலையே அ.தி.மு.க.வில் நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி தனது உத்தரவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி பொதுக்குழுவை கூட்ட முடியாது. எனவே மீண்டும் இருவரும் சேர்ந்து கூட்டலாம் என்று நீதிபதி கூறி இருந்தார். சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. அவர்கள் மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் சமரச முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் இந்த சமரச முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்து உள்ளார். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.