Tamilசெய்திகள்

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு – தீர்ப்பின் முழு விவரம்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், சி.ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வைரமுத்து தரப்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) காலை நீதிபதிகள் பிறப்பித்தனர். 128 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில் தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்வதாக அவர்கள் உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

வழக்கமான அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று கட்சி விதி கூறுகிறது. அதேநேரம், சிறப்பு பொதுக்குழுவுக்கும், வழக்கமான பொதுக்குழுவுக்கும் வித்தியாசம் உள்ளது. அதுதொடர்பாக விதியிலும் கூறப்பட்டுள்ளது. அதனால், சிறப்பு பொதுக்குழு கூட்டும் போது, தனித்தனியாக நோட்டீஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

பொதுக்குழு, சிறப்பு பொதுக்குழுவானாலும் எழுத்துப்பூர்வமாக உறுப்பினர்களுக்கு கடிதம் கொடுக்க வேண்டும் என்று விதியில் கூறவில்லை. அதனால், ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு நடப்பது குறித்து, ஜூன் 23-ந்தேதி நடந்த பொதுக்குழுவிலேயே அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பையே முறையான அறிவிப்பாக கருதிக் கொள்ளலாம். நோட்டீஸ் என்பது குறிப்பிட்ட தகவலை தெரிவிப்பது தான். அதை எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று கூற முடியாது. நோட்டீசுக்கு பல வடிவங்கள் உள்ளன. அப்படியே நடைமுறை முறைகேடு இருப்பதாக கருதினாலும், அதை பொதுக்குழுவில் சரி செய்து கொள்ளலாம்.

சிறப்பு பொதுக்குழு கூட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று விதிகளை உருவாக்கும்போது கருதி இருந்தால், அப்படி ஒரு விதியை முன்பே கொண்டு வந்து இருப்பார்கள். இந்த சிறப்பு பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக் கையின் படி கூட்டப் பட்டதால், மீண்டும் நோட்டீஸ் கொடுக்க வேண் டிய அவசியம் இல்லை. சிறப்பு பொதுக்குழுவில் நிகழ்ச்சி நிரல் குறித்த விளக்கத்தை ஜூலை 1-ந்தேதியே அறிவித்துள்ளது.

சிறப்பு பொதுக்குழுவை கூட்ட 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள், கையெழுத்திட்டு அவை தலைவரிடம் கொடுத்துள்ளனர். பொதுக்குழு கூட்டுவதற்கு அவை தலைவர் கண்டிப்பாக வேண்டும். அவை தலைவர் இல்லாமல் கூட்டத்தை கூட்ட முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையே விரிசல் இருந்ததால், சிறப்பு பொதுக்குழு கூட்டும்படி 2,190 உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் வெளியிட்ட அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் இருக்கும்போது, தான் 2,500 உறுப்பினர்கள் இருக்கும்போதுதான் வெளியிடப்பட்டது. அதனால், பொதுக்குழு அறிவிப்பு எங்களுக்கு தெரியாது என்று கூறமுடியாது. 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டால் விதிகளின் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சிறப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஆனால், இந்த இருவருக்கு இடையே உள்ள சர்ச்சையால் இருவரும் சேர்ந்து சிறப்பு பொதுக்குழு கூட்ட முடியாத நிலை இருந்தது. அப்படி ஒரு நிலை இருக்கும்போது, இருவரும் சேர்ந்து சிறப்பு பொதுக்குழுவை கூட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே இரண்டு தலைவர்களும் சேர்ந்து செயல்பட உத்தரவிட முடியாது.

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு அ.தி.மு.க.வின் செயல்பாட்டை முடக்கி விடும். பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுத்தார். எனவே ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானதா என்பதை பிரதான வழக்கில்தான் முடிவு எடுக்க முடியும். இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறி உள்ளனர். சென்னையில் ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஏற்கனவே தனி நீதிபதி தீர்ப்பு வழங்கி இருந்தார். இந்த தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்வதாக தற்போது இரு அமர்வு நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.

இதனால் தற்போது அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஐகோர்ட்டின் இந்த உத்தரவு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.