X

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதில் தீவிரம் காட்டும் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க.வில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகளில் சுமார் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினர் தேர்தல் ஆணையம் மற்றும் கோர்ட்டுகளை மட்டுமே நம்பி காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி அணியினர் வருகிற 11-ந்தேதி மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி அனைத்து முடிவுகளையும் அதிரடியாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த கூட்டத்தை நடத்தவிடக்கூடாது என்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த சண்முகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் அவர், 23-ந்தேதி பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கோர்ட்டு அவமதிப்பாகும். எனவே 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் கூறுகையில், ‘இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டுள்ளதால் நாங்கள் இப்போது உத்தரவு பிறப்பிக்க இயலாது. 11-ந்தேதி பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதியிடம் தான் முறையிட வேண்டும்’ என்று அறிவித்தார்கள்.

சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதையடுத்து இந்த 11-ந்தேதி வானகரத்தில் திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடிக்கும் ஏற்பாடுகளை தொடங்கி உள்ளனர். அதன் ஒருபகுதியாக அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் புதிதாக அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதம் தலைமை கழகம் என்று பெயரிட்டு ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும். என்னென்ன முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தம் 16 தீர்மானங்களை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கொண்டு வந்து நிறைவேற்றும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது முதல் தீர்மானம் ஆகும். அடுத்து தி.மு.க. ஆட்சி தொடர்பாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அதன்பிறகு ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான தீர்மானங்கள் அடுத்தடுத்து கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளன.

குறிப்பாக அ.தி.மு.க.வில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி நடைமுறைப்படுத்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படுகிறது. இதன்காரணமாக அ.தி.மு.க.வில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் முழுமையாக அனைத்து வகைகளிலும் காலாவதியாகும் தீர்மானமும் கொண்டுவந்து நிறைவேற்றப்படுகிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்தி தேர்வு செய்யும் தீர்மானமும் கொண்டுவரப்பட உள்ளது. தேர்தல் நடத்த கால அவகாசம் தேவை என்பதால் இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால பொதுச்செயலாளரை 11-ந் தேதி கூட்டத்திலேயே தேர்ந்தெடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தலைமையில் கட்சி நிர்வாக பணிகள் தொய்வின்றி தொடர செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.

மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை அறிவிப்பதும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நல திட்டங்களை ரத்துசெய்யும் தி.மு.க. அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறியது தொடர்பாக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க. அரசை வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட முயற்சிப்பதை மத்திய-மாநில அரசுகள் தடுக்க வேண்டும். நெசவாளர்கள் பிரச்சினைக்கு மத்திய-மாநில அரசுகள் தீர்வுகாண வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.தி.மு.க.வினர் மீது வழக்கு போடும் தி.மு.க. அரசை கண்டிப்பது ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த நடைமுறை மூலம் புதிய சட்ட சிக்கல்கள் எதுவும் அ.தி.மு.க. கட்சி வளர்ச்சி பணிகளை தடுக்க முடியாதபடி செய்ய முடியும் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் கருதுகிறார்கள். எனவே அ.தி.மு.க. வரலாற்றில் 11-ந்தேதி செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

மேலும் அ.தி.மு.க. கட்சி விதிகளை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழிகளில் கடைபிடிப்பது போன்றும் மாற்ற முடியும். எனவே 11-ந்தேதி பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் மூலம் எடப்பாடி பழனிசாமி அணியிடம் அ.தி.மு.க. முழுமையாக செல்லும் என்பது உறுதியாகி இருக்கிறது.

வானகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்தை 11-ந்தேதி நடத்த முடியாதபடி சட்ட சிக்கல்கள் எழுந்தால் மாற்று ஏற்பாடுகளாக என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை காரணம் காட்டி தடை வந்தால் என்ன செய்வது என்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தி முடிக்க தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைவர்கள் சென்னையில் இருந்து கூட்டத்தை நடத்துவார்கள். அந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும் தங்களது மாவட்ட தலைமை கழகத்தில் இருந்தபடியே பங்கேற்பார்கள். எனவே 11-ந்தேதி அ.தி.மு.க.வில் மாற்றங்கள் நிகழ்வது உறுதியாகி இருக்கிறது.