அதிமுக பொதுக்குழு கூட்டம் – உயர் நீதிமன்ற தீர்ப்பால் ஓ.பன்னீர் செல்வம் உற்சாகம்
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி நடந்தது. இந்த கூட்டம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பட்டியலிடப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி, இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கை கடந்த 10 மற்றும் 11-ந்தேதிகளில் நீதிபதி விசாரித்தார். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று பிறப்பித்தார்.
அவர் கூறியதாவது:
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக கூட்டம் கூட்ட கூடாது.
பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்.
ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு கூடிய அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.