X

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2300 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கடிதம்!

அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 23-ந்தேதி நடைபெறும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தனர். அந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக சமீபத்தில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அ.தி.மு.க.வை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றைத் தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினார்கள்.

இதற்கு ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க.வில் மிகப்பெரிய பூகம்பம் வெடித்து உள்ளது. மீண்டும் அ.தி.மு.க. தலைவர்கள் இரு பிரிவாக பிரிந்து காரசாரமாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சமரசம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இரட்டை தலைமையில் உறுதியாக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் தனக்கு எதிராக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று கருதுகிறார்.

எனவே 23-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி உள்ளார். ஆனால் இதை ஏற்க எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டார். 23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுக்குழு கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் மேற்கொண்ட முயற்சிகள் கை கொடுக்கவில்லை. அ.தி.மு.க.வில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதால் அந்த அணியினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடிக்க ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நேற்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வானகரம் திருமண மண்டபத்துக்கு சென்று பொதுக்குழு கூட்டத்தை எப்படி நடத்துவது என்று ஆய்வு செய்தனர். இன்றும் அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களில் யார், யாரை எந்தெந்த பகுதிகளில் அமர வைக்க வேண்டும் என்று ஆய்வு செய்தனர். இதனால் 23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடுவது உறுதியாகி இருக்கிறது.

இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. நேற்று அந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. இன்று 2-வது நாளாகவும் வக்கீல்கள் வாதம் நடத்தினார்கள்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக கோர்ட்டு என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கோர்ட்டு இதில் தலையிட மறுத்தாலோ அல்லது எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தாலோ அது ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும்.

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி அணியினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சட்ட ரீதியாகவும் தயாராகி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து ஆதரவு கடிதங்கள் பெறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் சுமார் 2700 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 2300 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளனர். அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் இந்த கடிதம் பெறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை 23-ந் தேதி திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் எழுதி கையெழுத்திட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இதனால் 90 சதவீதம் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுக்குழுவை உரிய நேரத்தில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஏற்கனவே திட்டமிட்டப்படி தீர்மானக்குழு வரையறுத்துள்ள தீர்மானங்களை பொதுக்குழுவில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்து உள்ளனர். அப்போது ஒற்றைத்தலைமை தீர்மானமும் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

குறிப்பாக பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதற்கு வெற்றி கிடைக்குமா என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் அவர் தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த கடிதத்தில் அவர், “இரட்டை தலைமையில் இருப்பவர்கள் கையெழுத்து போட்டு கொடுத்தால் மட்டுமே அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை கொண்டு வரப்பட்டால் அதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது” என்று கூறி இருப்பதாக தெரியவந்துள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றும் நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்பது சந்தேகம் என்று அரசியல் நிபுணர்கள் கூறி உள்ளனர்.