அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு முட்டுக்கட்டை போட முடியுமோ அவ்வளவு முட்டுக்கட்டை போட வேண்டும் என்பதில் மிக மிக தீவிரமாக உள்ளனர்.
அ.தி.மு.க.வின் அனைத்து அமைப்புகளிலும் புதிய நிர்வாகிகளை நியமிப்பதன் மூலம் மீண்டும் கட்சியை கைப்பற்ற முடியும் என்று அவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள், சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் அதற்கேற்ப பதிலடி கொடுக்க எடப்பாடி பழனிசாமி அணி தலைவர்களும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
ஓ.பன்னீர் செல்வத்தை நிரந்தரமாக முடக்குவது எப்படி என்று சட்ட நிபுணர்களுடன் பேசி வருகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை என்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதால், அதை அடிப்படையாக வைத்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். ஏற்கனவே இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனைத்து ஆவணங்களையும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொடுத்து உள்ளனர்.
அடுத்தக்கட்டமாக கோர்ட்டுக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி அணியினர் தயாராகி வருகிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலும் நீக்கப்பட்டு விட்டதால் அ.தி.மு.க. என்ற பெயரை பயன்படுத்த கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அ.தி.மு.க.வின் கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தையும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இன்னும் சில தினங்களில் இது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது அனைத்து விதமான ஆவணங்களை தாக்கல் செய்யவும் எடப்பாடி பழனிசாமி அணியினர் தீர்மானித்து உள்ளனர். எனவே அ.தி.மு.க. பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு சட்டரீதியாக தடை வரலாம் என்று கருதப்படுகிறது. அப்படி ஒரு தடை வரும்பட்சத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் அது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.